உலகமெங்கிலும் 178 நாடுகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் ஆன்மிக தலைவராக விளங்கி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று திகழ்ந்தவர் ஸ்ரீசத்யசாய்பாபா. ஆன்மிகம், கல்வி, சமூகசேவைகள், உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகளை செய்து அதன் மூலம் ஆன்மிகத்தை மக்களிடையே பரப்பியவர் ஸ்ரீசத்யசாய்பாபா.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் பெத்த வெங்கம்ம ராஜூ-ஈசுவரம்மா தம்பதியினருக்கு 4-வது குழந்தையாக 1926&ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சாய்பாபா பிறந்தார். இவருக்கு சத்யநாராயணன் ராஜூ என பெற்றோர்கள் பெயர் சூட்டினர்.
9-ம் வகுப்பு வரையே படித்த சத்திய நாராயணன் தனது இளம் வயதில் தன்னுடைய சகோதரர் சேஷ்மா ராஜுவின் உரவகொண்டா கிராமத்தில் வசித்து வந்தார். 1940 மார்ச் 8-ந்தேதி அவரை ஒரு தேள் கொட்டிவிட்டது. இதனால் மயக்கம் அடைந்த சத்தியா சில நாட்களில் குணம் அடைந்தார். ஆனால் அவரது நடவடிக்கைகளில் மாறுதல் காணப்பட்டது.
திடீர் என்று சமஸ்கிருத ஸ்லோகங்களை பாடினார். ஆனால் அதற்கு முன் அவர் சம்ஸ்கிருதம் படித்ததே இல்லை. இதனால் என்னவோ ஏதோ என்று பயந்துபோன் அவரது பெற்றோர் அவரை டாக்டர்களிடமும் மந்திரவாதிகளிடமும் காண்பித்தனர்.
1940 மே 23-ந்தேதி, சத்தியா தனது வீட்டில் உள்ளவர்களை அழைத்து அவர்களுக்கு பல பொருட்களை மந்திரத்தில் வரவழைத்து கொடுத்தார். அப்போது வீடு திரும்பிய அவரது தந்தை இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒரு பிரம்பை எடுத்து அவரை மிரட்டியபடி " நீ உண்மையிலேயே யார் " என்று கேட்டார். இதற்கு சத்தியா " நான் தான் சாய்பாபா " என்றார்.
அதாவது மராட்டிய மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா மிக புகழ் பெற்றவராக இருந்தார். அவர் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், நான் ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று சாய்பாபா கூறினார். அது முதல் சத்தியா என்ற பெயர் மறைந்து அவரை சாய்பாபா என்றே எல்லோரும் அழைக்க தொடங்கினார்கள்.
அது முதல் அவர் தீவிரமாக ஆன்மிக பணிகளில் இறங்கினார். பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியதால் பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இதைத்தொடர்ந்து அவரது பக்தர்கள் 1950-ம் ஆண்டு புட்டபர்த்தி கிராமத்தில் பிரசாந்தி நிலையம் என்ற ஆன்மிக மையத்தை உருவாக்கினார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியில் தெரியாத ஒரு கிராமமாக இருந்தது புட்டபர்த்தி கிராமம். ஆனால் தற்போது இக்கிராமத்தில் அமைந்துள்ள சத்ய சாய்பாபாவின் " பிரசாந்தி நிலையம் " ஆசிரமத்தால், புட்டபர்த்தி என்ற பெயர் உலகெங்கிலும் மிகவும் பிரபலமடைந்து உள்ளது.
பல்வேறு நாடுகள், மாநிலங்கள், இனம், மொழி, மதம், கலாசாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்,பெண் பக்தர்கள் இந்த ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். உலக அளவில் கோடிக்கணக்கான பக்தர்கள், சத்யசாய் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்கள் அளிக்கும் நன்கொடைகளை அவர் தனது கல்வி, சமூகப்பணிகளுக்காக செலவிட்டார். சத்யசாய்பாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகசேவை நிறுவனங்கள் என பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 1971-ம் ஆண்டில் அனந்தபூரில் பெண்களுக்கான கல்லூரியை பாபா தொடங்கினார். 1978-ல் பெங்களூரில் ஆண்கள் கல்லூரி தொடங்கினார்.
1981-ல் ஸ்ரீ சத்யசாய் உயர் கல்விக்கான தனி அமைப்பு புட்டபர்த்தியில் தொடங்கப்பட்டது. மிகப்பெரிய கலையரங்கம், கோளரங்கம், சத்ய தர்மஸ்தூபி, ரெயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றை பாபா புட்டபர்த்தியில் நிறுவினார்.
1991-ல் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி முதலீட்டில் அதிநவீன மருத்துவமனை பிரசாந்தி நிலையத்தில் தொடங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், அதை தொடங்கி வைத்தார். சத்யசாய் மருத்துவ மனைக்கு மைக் தெகரட் என்ற அமெரிக்க தொழில் அதிபர் (பிரபல ஹாட் ராக் காபி பார் உரிமையாளர்) ரூ.200 கோடி நன்கொடையாக வழங்கினார்.
அவருடைய நன்கொடையின் மூலம்தான் இந்த மருத்துவமனை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை உள்பட எல்லாவித நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 10 பேருக்காவது இலவச இருதய ஆபரேஷன் செய்யப்படுகிறது.
ஜி.வி.ஷெட்டி என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் வழங்கிய ரூ.25 கோடி நன்கொடை மூலம் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இந்தோனேஷிய பக்தர் ஒருவர் அளித்த 50 கோடி ரூபாய் நன்கொடையின் மூலம் 2010-ல் புட்டபர்த்தியில் இசைப்பள்ளி கட்டப்பட்டது. சத்யசாய்பாபா பெயரில் பல்கலைக்கழகமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 178 நாடுகளில் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் 114 நாடுகளில் 1200 சத்ய சாய்பாபா சமூக அமைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சாய்பாபா, இந்தியாவில் தர்மஷேத்ரா என்ற பெயரில் மும்பையிலும், சிவம் என்ற பெயரில் ஐதராபாத்திலும், சுந்தரம் என்ற பெயரில் சென்னையிலும் ஆன்மிக மையங்களை உருவாக்கினார். அவரது ஆன்மிக பணியை பாராட்டி மத்திய அரசு கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி அவரது பிறந்த நாள் அன்று அவரது பெயரில் தபால் தலை மற்றும் தபால் உறையை வெளியிட்டு கவுரவித்தது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்க, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணாநீர் வரும் கால்வாய் பராமரிக்கப்பட்டால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் பெற முடியும் என்ற நிலையில், ஸ்ரீசத்யசாய்பாபாவின் உதவியால், ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை மூலம் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. ரூ.300 கோடி செலவில் கண்டலேறு முதல் ஊத்துக்கோட்டை வரையிலான கால்வாயை புனரமைத்தார்.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பிரம்மாண்டமான பணியை 2 ஆண்டுகளில் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை செய்து முடித்தது. இந்த திட்டத்தால் இன்றைக்கு சென்னை நகர மக்கள் தங்குதடையின்றி குடிநீர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராயலசீமாவில் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 731 கிராம மக்கள் பயன் பெறும் வகையில் கோதாவரி மேடாக் மற்றும் மெகபூர் நகர் குடிநீர் திட்டங்களை ரூ.300 கோடி செலவில் ஸ்ரீசத்யசாய் மத்திய அறக் கட்டளை நிறைவேற்றியது.
மேலும் உலகமெங்கிலும் உள்ள சாயி நிறுவனத்தினர் தங்கள் பகுதிகளில் நிகழும் இயற்கை பேரிடர் சமயங்களில் உதவிகளை செய்து வருகின்றனர். சத்யசாய்பாபா தனது கொள்கைகளை எழுதியும், பேசியும் பரப்பி வந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆன்மிக நூல்களை வெளியிட்டு வந்தார்.
சாய்பாபாவுக்கு 178 நாடுகளில் பக்தர்கள் இருந்த போதிலும் இவர் 1968-ம் ஆண்டு உகாண்டா நாட்டுக்கு சென்றது தான் இவரது ஒரே வெளிநாட்டு பயணம் ஆகும். 1963-ம் ஆண்டு இவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனால் விரைவிலேயே குணம் அடைந்து விட்டார். 1993-ம் ஆண்டு ஜூன் 6 ந் தேதி சாய்பாபாவை கொல்ல முயற்சி நடந்தது.
அப்போது அவரது படுக்கை அறையில் நடந்த மோதலில் அவரது தனி உதவியாளர் ராதா கிருஷ்ணமேனன் உள்பட 6 பேர் பலியானார்கள். உடல் நலிவடைந்ததால், சாய்பாபா 2005-ம் ஆண்டு முதல் தள்ளுவண்டியிலேயே பக்தர்கள் முன் வலம் வந்தார்.
1974-ம் ஆண்டு குரு பூர்ணிமா நிகழ்ச்சியின்போது தன்னுடைய சீடர்கள் மத்தியில் பேசிய பாபா, தன்னுடைய உடல் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். 96 வயது வரை வாழ்வேன் என்று கூறி இருந்தார்.
இந்த அவதாரத்துக்குப்பிறகு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிரேம சாய் என்ற பெயரில் மீண்டும் அவதரிக்க இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்து இருந்தார்.
0 comments:
Post a Comment